WELCOME

வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றியதகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

Saturday, January 7, 2012

அய்யா வைகுண்டா


அய்யா வைகுண்டா்

அய்யா உண்டு
 "அய்யா சிவசிவ சிவசிவ அரகரா அரகரா!"




வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதில் எதிரியாய்ப் பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநகரம் புக்கிடுவார்
மலடியும் இக்கதையை மாவிருப்பத்தோடு இளகித்
தலம் அளந்தோனை நாடிதான் கேட்பாளாமாகில்
என் ஆணை பார்வதியாள் ஏகாபரத்தின் தன் ஆணை
உன் ஆணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம் வைத்துக் கேட்பாராகில்
திட்டமது சொன்னோம் தீரும் திருவாணை



                        

          இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது.

                  அய்யாவழி புராண வரலற்றின்படி அய்யா வைகுண்டரின் தூல உடலையும், சூட்சும உடலையும் தாங்கி சம்பூரணத்தேவன் என்னும் தெய்வ லோகவாசி தாமரைகுளம் என்னும் ஊரில் பிறக்கிறார். வைகுண்ட அவதாரம் வரை அவதாரச்சடலத்தை சுமக்கும் பொறுப்பு சம்பூரணதேவனுக்கு கொடுக்கப்படுகிறது. இவர் 'முடிசூடும் பெருமாள்' என்று வரலாற்றில் அறியப்படுகிறார்.

  • பொருளடக்கம் 


1 தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு 
2 மாற்றியமைப்பு 
3 வைகுண்ட அவதாரம் 
4 தவம் 
5 தீய சக்திகளை ஒடுக்குதல் 
6 மந்திர தந்திர முறைகளை திரும்பப்பெறுதல் 
7 பண்டாரமாக வைகுண்டர் 
8 குற்றப்பத்திரிகை 
9 சிறை வாசத்துக்குப் பின்பு 
10 வைகுண்டம் போதல் 
11 சீடர்கள் 
12 இவற்றையும் பார்க்கவும் 
13 ஆதாரம் 

  • தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு



                 கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. தாழ்ந்த சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது.

              அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் குறோணியை அழிக்க இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.

            முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக அகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள்.

                 பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.


  • மாற்றியமைப்பு



               இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.

                 மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,

"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய் 
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய் 
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு 
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ" 

          ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.

           இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





  • வைகுண்ட அவதாரம்

              
                1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது.

           முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடைவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.

இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரனத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது.

             அவதாரத்தின் முதல் நிலை, இறந்து பிறக்கும் குழந்தை (தூல உடலின் பிறப்பு). 
இரண்டாம் நிலை, தூல உடலில் செலுத்தப்படும் சம்போரணாதேவன், சுமக்கும் நாராயணரின் சூட்சும உடல். 
அவதாரத்தின் மூன்றாம் நிலை, 24 வருடங்களிக்கு அப்பால் சம்போரணதேவனுக்கு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் ஏகம் உலகில் அவதரித்து வருவது. இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும உடல், ஏகம் என்னும் காரண உடல், இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது.

               பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை உட்படுத்தி, வைகுண்ட அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.

                ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.

  • வைகுண்டரின் தவம்


           தெட்சணம் எனப்படும் பூவண்டன் தொப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே 
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே 
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் 
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்" 

           மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.


  • தீய சக்திகளை ஒடுக்குதல்


     அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது 
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும் 
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப் 
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்" 

         அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.

  •  மந்திர தந்திர முறைகளை திரும்பப்பெறுதல்


      பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

   மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,

"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை 
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை 
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை 
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்" 




  • பண்டாரமாக வைகுண்டர்


       வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

      அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர் நடக்கும் கலியுகத்தை அழித்து பேரின்பநிலையான தர்மயுகத்தை மலரச்செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.

            சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.



  • குற்றப்பத்திரிகை

   
   அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது.



  • சிறை வாசத்துக்குப் பின்பு


         சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார்




  • வைகுண்டம் போதல்

    பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

     ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.

      வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. 

  • சீடர்கள்

   அய்யா வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. முந்தின யுகத்தில் பாண்டவர்களாக இருந்த ஐந்து பேரையும் இக்கலி யுகத்தில் ஐந்து சீடர்களாக பிறவி செய்யப்பட்டதாக அகிலம் கூறுகிறது. அவர்கள்,

தர்ம சீடர் 
வீமன் சீடர் 
அர்ச்சுணன் சீடர் 
சகாதேவன் சீடர் 
நகுலன் சீடர் 


No comments:

Post a Comment